247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Thursday, July 19th, 2018

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 247 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதி அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான நீதித்துறை செயற்பாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 2015 டிசம்பர் 11 ஆம் திகதியிலிருந்து 2017 பெப்ரவரி 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட 247 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப 34 மரண தண்டனை கைதிகளுக்கு 2015 டிசம்பர் 11 ஆம் திகதியிலும் 83 மரண தண்டனை கைதிகளுக்கு 2016 ஏப்ரல் 20 ஆம் திகதியிலும் 70 மரண தண்டனை கைதிகளுக்கு 2016 மே 20 ஆம் திகதியிலும் மேலும் 60 மரண தண்டனைக் கைதிகளுக்கு 2017 பெப்ரவரி 4 ஆம் திகதியிலும் ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த நீதி அமைச்சு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அவர்களின் மரண தண்டனை ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றுவதற்காக முன்னாள் நீதி அமைச்சரால் ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்கப்பட்டிருந்ததாகவும் இதற்கேற்பவே பரிந்துரை செய்யப்பட்ட அனைவரினதும் மரண தண்டனையிலிருந்து ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து அவர்களின் ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றுவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: