ஜூனில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்ததற்கான காரணத்தை அறிய சிறப்புக் குழு நியமிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 864 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில் புத்தாண்டுக் கொத்தணியில் ஆயிரத்து ,786 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியிருந்த 78 பேருக்கும் நேற்று தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தொற்று உறுதியானவரக்ளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 59 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 107 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 481 பேர், கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2 இலட்சத்து 25 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்

இலங்கையில் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கோவிட் தொடர்பான இறப்புகளின் திடீர் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய சுகாதார நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அல்பா – பிரித்தானிய மாறுபாடு கண்டறியப்பட்டதன் விளைவாக ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 1500 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 110 கோவிட் இறப்புகள் பதிவாகியிருந்ததாகவும், மே மாதத்தில் இது 806 ஆக அதிகரித்துள்ளதாகவும், அதன் பின்னர் ஜூன் மாதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் குறித்த மையம் தெரிவித்துள்ளது.

எனவே, ஜூன் மாதத்தில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரிப்பதற்கான காரணத்தை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று வைத்தியர் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோவிட் வைரஸின் மிகவும் வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக கூறியுள்ள அவர், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: