ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிக மோசமான நிலைக்கு செல்லும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Sunday, May 26th, 2024

நாட்டில் பொருளாதார ஸ்திரன்மையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

தேர்தல் தொடர்பாக எவரும் குழப்பமடையத் தேவையில்லை. ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். இந்த நாடு பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.

இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமாகும். எனவே தான் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள்.

ஆட்சியாளர்கள் எவரையும் குறை கூறாமலேயே ஜனாதிபதியாக அவர் அப்போது நாட்டைப் பொறுப்பேற்றார். அவர் இந்த நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் இந்த நாடு நெருக்கடி நிலையில் இருந்து கட்டம் கட்டமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

உலகில் எந்தவொரு நாடு வெகுசுலபமாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்ததில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வளமான கிராமம் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்...
புதிய அரசின் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்ப...
பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுக்கவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது – பிரதமர...