பொது இடங்களில் புர்கா அணிவதை தவிருங்கள் – அகில இலங்கை உலமா சபை!

Friday, April 26th, 2019

பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ‘புர்கா’ ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு அகில இலங்கை உலமா சபை முஸ்லிம் பெண்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த கோரிக்கையை விடுப்பதாக உலமா சபை அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து கடந்த சில தினங்களாக நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தாக்குதல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று உலமா சபை தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் வைத்தே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புர்கா அணிவது எமது கலாச்சார அங்கமாகும். இது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமையாகும்.

ஆனால் தற்போதைய நிலைமையில் பாதுகாப்பு தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ‘புர்கா’ ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

மேலும், தங்களை அடையாளப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

Related posts: