நன்நீர் கிணறுகள் உவர் நீராக மாறுகின்றன : தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் –  தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Saturday, July 21st, 2018

வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாறிவருவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலணைப் பிரதேச சபைத் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தெரிவித்தார்.

வேலணைப் பிரதேச சபை, நீர் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு நாளைக்கு 3 இலட்சம் லீற்றர் தண்ணீர்த் தாங்கி மற்றும் குழாய் மூலமாக வழங்கப்படுகின்றது.

இது தவிர ஆலயத் திருவிழாக்கள் மற்றும் சுப காரியங்களுக்கும் தேவையான அளவு மேலதிகத் தண்ணீரும் வழங்கப்படுகின்றது. சாட்டிப் பிரதேசத்தில் உள்ள 11 கிணறுகளில் இருந்து இந்த நல்ல தண்ணீர் பெறப்படுகின்றது. இந்தக் கிணறுகளில் இருந்து மேலதிகமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் உவர் நீர்ப் பிரதேச நீர் நிலைகள் அண்மையில் உள்ளமையால் மூன்று நல்ல தண்ணீரக் கிணறுகள் உவர் நீராக மாறியுள்ளது.

ஏனைய கிணறுகளும் எதிர்காலத்தில் உவர் நீராக மாற்றமடையும் அபாயநிலை காணப்படுகின்றது. இதனால் அமைப்புகள் மற்றும் தனியார், பவுசர்களில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வோரின் சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளோம்.

மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் உணவு சமைத்தல், குடிதண்ணீர்த் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். தற்போது தண்ணீர் எடுக்கப்படும் நல்ல தண்ணீர்க் கிணறுகளின் சுவையும் மாற்றம் அடைவதாக மக்கள் கூறி வருகின்றனர். ஆகவே எம்மிடம் இருக்கும் நல்ல தண்ணீரக் கிணறுகளை நாம் பாதுகாக்க வேண்டும். மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

Related posts: