ஜனவரிமுதல் தொழில் பயிற்சி பாடங்கள் இலவசம்!

Friday, December 2nd, 2016

2017 ஜனவரி முதலாம் திகதி முதல் அனைத்து வாழ்க்கை தொழில் பயிற்சி பாடத்திட்டங்களும் இலவச கல்வியாக முன்னெடுக்கப்படும் என திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இலவச தொழில் பயிற்சிகளை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

க. பொ. த. சாதாரண தரத்துக்கு சமனாக NVQ 3 தகைமையையும் க.பொ.த. உயர்தர தகைமைக்கு சமனாக NVQ 4 தகைமையையும் அரசாங்கம் அங்கீகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய அரசாங்க சேவையிலுள்ள தொழிற்நுட்பத்துறைகளுக்கு க.பொ.த. சாதாரண தகைமைக்கு பதிலாக NVQ 3 தகைமை உடையவர்களும் க.பொ.த. உயர்தர தகைமைக்குப் பதிலாக NVQ 4 தகைமை உடையவர்களும் உள்வாங்கப்படுவரென்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுக் கூறினார்.

இலங்கையின் வாழ்க்கை தொழில் பயிற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய திருப்புமுனை குறித்து திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சர் மத்தும பண்டாரவும் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்ததாவது:- முதற் தடவையகே அரசாங்கம் NVQ 3 மற்றும் NVQ 4 ஆகிய தகைமைகளை அங்கிகரித்துள்ளது. இது தொடர்பில் நாம் அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்துக்கான அங்கீகாரம் எமக்கு கிடைத்துள்ளது.

அரசாங்கம் 13 வருடங்கள் வரையான கல்வியை கட்டாயமாக்கியுள்ள நிலையில் இத்திட்டம் மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது என்பதனை நிதி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனடிப்படையில் 2017 ஜனவரி முதலாம் திகதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வாழ்க்கைத் தொழில் பயிற்சிகளும் நுற்றுக்கு நூறு வீதம் இலவச கல்வியாகவே முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Mahinda-Samarasinghe

Related posts: