சீனாவிடம் இருந்தும் இலங்கைக்கு பிராணவாயு – வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் கோரிக்கை!

Sunday, August 22nd, 2021

அதிகரித்து வரும் ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்ய, ஒட்சிசனை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் உதவியை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பிலுள்ள சீனத் தூதர் சீ ஷென்ஹொன்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கைக்கான தொடர்ச்சியான ஆதரவுக்கு சீன அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, சீனாவின் உறுதியான உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கையின் சமூக -பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதில் சீனாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை சீனத் தூதர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடல் கோவிட் -19 ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் சீனா மற்றும் இலங்கை இடையே பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த பிராணவாயு கொள்கலன்களை கொண்டுவந்துள்ளன.

இதில், சென்னையில் இருந்து 40 தொன் மருத்துவ ஒட்சிசனை ஏற்றிவந்த கப்பல், நேற்று இரவு இலங்கையை வந்தடைந்து விட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: