சம்பவ இடத்துக்கு சென்று 5 பொலிஸாரும் விளக்கமளிப்பு!

Wednesday, October 26th, 2016

பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட குளப்பிட்டிப் பகுதிக்கு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று (26) காலை அழைத்துச் செல்லப்பட்டு, சம்பவம் பற்றிய விவரத்தை அங்கு வைத்து வழங்கியுள்ளனர்.

அவர்கள் நின்று சுட்ட இடமான குளப்பிட்டிச் சந்தையின் முன்பகுதி மற்றும் மாணவர்கள் வீழ்ந்து, சடலமாக மீட்கப்பட்ட கடையின் முன்பக்கம் வரையிலும் இவர்கள் சரியாக அடையாளங் காட்டினர்.

அவர்கள் காட்டிய அடையாளங்களின் அடிப்படையில், நின்று சுட்டதாகக் கூறப்பட்ட இடத்தில், சொஹோ பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், துப்பாக்கிச் சன்னத்தின் கோது ஒன்றும் மீட்கப்பட்டது.

குற்றப்புலனாய்வுப் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இந்த 5 பொலிஸாரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து, மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 5 பொலிஸார் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அந்த ஐந்து பொலிஸாரே இன்று சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அழைத்து வரப்பட்ட ஐந்து சந்தேகநபரான பொலிஸாரில், ஒருவர் மாத்திரம் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, அனைத்தையும் அடையாளங் காட்டியமை குறிப்பிடத்தக்கது.

article_1477457731-20161026_093041

Related posts: