சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்துக்கு கொண்டுவர நடவடிக்கை – தேசிய பேரவையின் உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு!

Thursday, November 24th, 2022

நாட்டிலுள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் டிஜிட்டல் எனப்படும் எண்மான தளத்துக்குக் கொண்டுவருவதன் ஊடாக பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவது தொடர்பில் தேசிய பேரவையின் உபகுழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொடருந்து, பேருந்து, பாடசாலை வாகன சேவை மற்றும் வாடகை வாகன சேவை போன்ற நாட்டில் உள்ள சகல போக்குவரத்து சேவைகளையும் ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வருவதனூடாக பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு, வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தமக்குக் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், பாடசாலை வாகன உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட போக்குவரத்துத் துறையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக வாகன டயர் உள்ளிட்ட உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் வாகன உதிரிப்பாகங்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதால் பேருந்து, பாடசாலை சேவை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் போக்குவரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி அவற்றையும் உள்ளடக்கிய முன்மொழிவுகள் குழுவினால் முன்வைக்கப்படும் என உப குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்தச் செலவாகும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க பயன்...
இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 மில்லியன் டொலர் இழப்பு - சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குப...
வாகன விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு - பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவிப்பு!

நாட்டின் தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த நடவடிக்கை - கைத்தொழில் துறை அமைச்சர் வீரவ...
சிமெந்துக்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது - ஏனைய பொருட்களுக்குமான தட்டுப்பாடும் ...
பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் விலை மோசடி – நுகர்வோர் கடும் விசனம்!