சமூக சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கோபா குழுவின் தலைவர் வலியுறுத்து!

Saturday, October 23rd, 2021

சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இருப்பதன் அவசியம் தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா  குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது..

சமூக சேவைகள் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராயும் நோக்கில் கோபா குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சுக்களின் விடயப்பரப்புகளை தயாரிக்கும் போது தரப்படுத்தல் காணப்படுவது அவசியம் என்று இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பர்னாந்துபுல்லே தெரிவித்துள்ளார்..

அத்துடன் அங்கவீன குழந்தைகளுக்காக சேவைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட ரீதியில் நிறுவனங்களை ஸ்தாபிப்பதன் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்தல், அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை ஒரு நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தும் தேவையையும் குழு சுட்டிக்காட்டப்பட்டது..

இந்நிலையில் நீண்ட காலமாக சமூக சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

சமூக சேவைகள் திணைக்களம், மாகாண சமூக சேவைகள் திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுவது முக்கியமானது எனவும் குழு உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர்.

இதேவேளை யாசகர்கள் அதிகரிப்பது ஒரு தேசிய பிரச்சினை எனவும், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய வேலைத்திட்டம் தேவை எனவும் குழுவின் கருத்தாக இருந்தது.  அதனை தீர்ப்பதற்கான கூட்டு வேலைத்திட்டத்தின் அவசியம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வுகளின் முடிவுகளை சமூக சேவைகள் திணைக்களத்துக்கு பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் குழுவின் கருத்தாக இருந்தது. சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவரும் 08 தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு சொந்தமான 22 ஹெக்டயர் காணிகளை அந்தத் திணைக்களத்துக்கு கையகப்படுத்தாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சமூகத்தில் உள்ள அனைத்து அங்கவீன நபர்கள் தொடர்பிலும் சரியாகக் கண்டறியக்கூடிய தேசிய தரவு அமைப்பொன்று இதுவரை இல்லாமை குறித்து குழு சமூக சேவைகள் திணைக்களத்திடம் தகவல் கோரியது. அவ்வாறு காணப்பட்டாமை தேசிய கொள்கை வகுப்புக்கு பாரிய தடையொன்றாக இருப்பதாக குழு சுட்டிக்காட்டியது.

121 மில்லியன் ரூபாய் செலவு செய்து மட்டக்களப்பு தொழிற் பயிச்சி நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த கட்டடத்தை பயன்படுத்தாமை தொடர்பில் குழு விசேட கவனம் செலுத்தியது. அந்த நிலையத்தின் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பளார் சந்தன ரனவீர ஆரச்சி தெரிவித்தார்.

அத்துடன் சமூக சேவைகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்காக முறையான வகையில் தன்னார்வ தொண்டர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: