10 வருடத்திற்கு மேலாக ஒரே பாடசாலையிலிருக்கும் மேலும் 5473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

Sunday, March 4th, 2018

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றி வரும் 5473 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேசிய பாடசாலைகளில் நீண்ட காலம் பணியாற்றும் ஆசிரியர்களை இட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கடந்த வருடம் ஜீன் மாதம் கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தலை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அவ்வாறு சுமார் 12, 000 ஆசிரியர்கள் ஒரே பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

பின்னர் அமைச்சரின் தொடர்ச்சியான அறிவுறுத்தலுக்கு ஏற்ப கடந்த ஜீன் மாதத்திலிருந்து இதுவரையில் அவ்வாறான சுமார் 6500 ஆசிரியர்களை இரண்டு கட்டங்களாக வேறு இடங்களிலுள்ள பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு இடம்மாற்றியுள்ளது. தற்போது மூன்றாவது கட்ட இடமாற்ற நடவடிக்கையாகவே எஞ்சியுள்ள 5473 ஆசிரியர்களையும் வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதுபற்றி கல்வி அமைச்சு தெரிவித்துள்ள தகவலில் இவ்வாறு மூன்றாவது கட்ட இடமாற்ற நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தேசிய பாடசாலைகளில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் எனவும் இவ்வாறு தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் சுமார் 36, 000 ஆசிரியர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கான ஆசிரியர்கள் ஒரே பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்களாகவே இருந்துள்ளனர் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: