புரவி புயலின் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – கிளிநொச்சியிலும் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு என அனர்த்த முகாமைத்துவ பணியகம் தெரிவிப்பு!

Thursday, December 3rd, 2020

புரவி புயலால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும். மாவட்டத்தில் தற்போது 21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 720 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 605 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் 16 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 256 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு சங்கானை பிரதேசத்தில் நேற்றையதினம் கடலுக்கு சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாககவும் தகவல் வெளியிட்டுள்ள மாவட்ட செயலகம் இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தொண்டமனாறு தடுப்பு அணையின் 8 கதவுகள் திறக்கப்பட்ட போதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர் வடிந்து ஓடுவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிற்பகல்வரை மழை தொடருவதால் வெள்ள நிலைமை அதிகரிக்கும் எனவும் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இன்று திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு வீடு முழுமையாகவும் 93 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 வீடு முழுையாகவும் 68 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: