சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரின் முறைகேடு: மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

Sunday, April 16th, 2017

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மேற்படி பாடசாலை அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடு தொடர்பாக வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோரைக் கொழும்பு மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைமைச் செயலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும்  அறியவருவதாவது,

கடந்த வருடம் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையாகிய  சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையையடுத்து வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையினால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்றது. இதில் பரஸ்பரம் இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிய நிலையில் குறித்த பாடசாலையின் அதிபர் பெற்றுக்கொண்ட பணத்துக்கு எவ்வித பற்றுச்சீட்டுக்களும் வழங்கப்படாமை விசாரணைக்குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால்  மூன்று ஆசிரியர்களுக்கு மட்டும் இடமாற்றம் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏறத்தாழ இருபது பேர் இணைந்து விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், இல்லையேல் தம் அனைவருக்கும் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குமாறும் கோரியிருந்தனர்.

இதன் பின்னர் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் அப்போதைய உதவிச் செயலாளராக விருந்த திருமதி- சுகந்தி தலைமையில் மீண்டும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழு  குறித்த அதிபர் தொடர்பாகப் பரிந்துரைத்த விடயங்களை வடமாகாணக்  கல்வியமைச்சின் செயலாளர் நடைமுறைத்தாமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்  யாழ்.பிராந்திய காரியாலயத்தில்  தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னரும்  வடமாகாணக்  கல்வியமைச்சின் செயலாளர் சார்பாக சமுகமளித்த பிரதிநிதிகள்  மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கூறிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தாது கல்வியமைச்சின் செயலாளர் இழுத்தடித்து வந்தார்.

இந்த நிலையில்  பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்  ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் முறையிட்டிருந்தனர். இந்த முறைப்பாட்டை வடமாகாணக்  கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக அழைத்து விசாரித்து அதிபர் மேற்கொண்டிருந்த பண முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கு முன்னர் குறித்த பாடசாலை அதிபரை இடமாற்றுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால்,  வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் அதனையும் நடைமுறைப்படுத்தாத சூழலில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்திற்குச் செய்யப்பட்ட ஆசிரியர்களின் முறைப்பாடு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமையகமான கொழும்புக்கு மாற்றப்பட்டது.

இதற்கமைய  இம்மாதம்- 18 ஆம் திகதி முற்பகல்- 10 மணிக்கு கொழும்பு -08 இல் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைச் செயலகத்துக்கு வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்), சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருவருட காலம் கடந்த பின்னர் தற்போது சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அதிபர் வெற்றிடத்துக்கான விண்ணப்பம் வடமாகாணக் கல்வியமைச்சால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: