கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வாழ்க்கை செலவு குழுவிடம் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை!

Sunday, September 26th, 2021

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வாழ்க்கை செலவு குழுவிடம் கோரியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு கூட்டத்திற்கு தமது சங்கத்தின் சார்பில் 4 பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், துறைமுகத்தில் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பிலான எந்தக் கோரிக்கையும் நிதியமைச்சுக்கு கிடைக்கப்பெறவில்லையென நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வங்கிகளுக்கான டொலரை வெளியிடுவதற்கான திட்டம் ஒன்றும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எந்தவொரு இறக்குமதியாளருக்கும் அத்தியாவசிய பொருட்களைத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கும் சந்தர்ப்பத்தில், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பில் அறியப்படுத்துமாறு நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

தற்போது வரையில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாதுள்ளன.

இந்நிலையில் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: