நுண்நிதி நிறுவனங்களால் வடக்கில் பாதிப்பு அதிகம்- 1.5 இலட்சத்துக்குக் குறைவாக கடன்பெற்றோருக்கு சலுகை!

Saturday, June 9th, 2018

நுண்நிதி நிறுவனங்களின் கூடிய தாக்கம் வடக்கிலேயே உள்ளது. யாழ்ப்பாணத்தில் பலர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக் கொண்டனர். கிராம நுண்கடன் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கும் நோக்கில் கட்சி பேதமற்ற குழுவொன்றை நியமிக்கவுள்ளோம். நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர்கள் மங்கள சமரவீர சபையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் மொத்தமாக 44 நுண்கடன் நிதிநிறுவனங்கள் உள்ளன. நிதிநிறுவனங்களின் செயற்பாடுகள் மிகவும் மோசமானதாகக் காணப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் ஊடாக கடன் பெற்று மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதிநிறுவனங்கள் பெண்களை இலக்குவைத்தே செயற்படுகின்றன.

வடக்கு, வடமத்திய மாகாணங்களில் நுண்நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் கடன் செலுத்த முடியாமல் இருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கட்சி பேதமின்றி குழுவொன்றை அமைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

நுண்நிதி நிறுவனங்களில் சிக்குண்ட பெண்களுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி சிறப்புச் சலுகை வழங்கவுள்ளது. ஒன்றரை இலட்சத்துக்கு குறைந்த கடன் பெற்றவர்களுக்கான வட்டி நீக்கி அதனை அரசு பொறுப்பேற்கும் என்றார்.

நாடாளுமன்றில் நுண்கடன் விவகாரம் தொடர்பில் உடனடித் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: