வடக்கு ஆசிரியர்களுக்கு கைவிரல் பதிவேடு கட்டாயம்!

Thursday, November 30th, 2017

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கைவிரல் பதிவேடு அரசின் சுற்றிக்கைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது –

போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்க அதிகஷ்ட்டப் பிரதேச பாடசாலைகளை மட்டும் காலையில் 30 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. இலங்கையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கைவிரல் பதிவேடு முறைமை பெரும்பாலான பாடசாலைகளில் நடைமுறையில் உள்ளன. கொழும்பு அரசின் அறிவுறுத்தல்படியே அது நடைமுறையில் உள்ளது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் 71 வீதமான ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பிறமாவட்டங்களுக்குப் பணியாற்றச்  செல்கின்றனர். இவ்வாறான நிலையில் நாம் இதனை நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.

புதிய நடைமுறைகள் வரும்போது அவற்றுக்கு எதிர்ப்பலைகள் எழுவது வழக்கம். எதிர்ப்பலைகள் வந்தாலும் நாட்டின சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. அந்த வகையில் வடக்கு மாகாணத்திலும் கைவிரல் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும். அது நடைமுறைக்கு வரும்போது வடக்கில் அதி கஷ்டப் பிரதேசங்களுக்கு நாம் சில சலுகைகளை வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதாவது இரண்டு பேருந்து எடுத்துப் பயணிக்க வேண்டிய இடங்கள், பல தூரம் நடந்து செல்லக் கடிய இடங்கள் ஆகியவற்றுக்கு நாம் பாடசாலை நேரத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்று உத்தேசித்துள்ளோம்.

அதி கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 2 மணிக்கு நிறைவு செய்வதன் ஊடாக கைவிரல் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவாலைத் தீர்க்க முடியும். இவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு இது நடைமுறைப்படுத்தப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Related posts: