கழிவுகளை முறையற்ற விதமாக காட்டுப்பகுதிக்குள் கொட்டுவதனால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் – மன்னார் சாந்திபுரம் கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, January 11th, 2024

மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையற்ற விதமாக சாந்திபுரம் காட்டுப்பகுதிக்குள் கொட்டுவதனால் டெங்கு நோய் உட்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் நகரசபை முன்னதாக பாப்பா மோட்டை பகுதியில் உள்ள திண்ம கழிவகற்றல் நிலையத்தில் ஒழுங்கான முறையில் குப்பைகளை தரம் பிரித்து களஞ்சியப்படுத்தாமையினால் கொழும்பை சேர்ந்த அரசார்பற்ற நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்து குறித்த பகுதியில் திண்ம கழிவுகளை சேகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மன்னார் நகரசபைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த தீர்ப்பை காரணம் காட்டி மன்னார் நகரசபை நீண்ட நாட்களாக மன்னார் நகர பகுதியில் கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் நகரமே சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகியிருந்தது.

ஏற்கனவே சாந்திபுரம் பகுதியில் மிருகங்களின் உடல் பாகங்கள், மருத்துவ கழிவுகள் உட்பட முறையற்ற விதமாக குப்பைகள் கொட்ட பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பை அடுத்து குறித்த செயல்பாடு நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி மீண்டும் நகர சபை திண்ம கழிவுகளை அனுமதியின்றி தரம் பிரிக்காது சாந்திபுர காட்டுபகுதிக்குள் கொட்டுவதாக சாந்திபுரம் பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக உக்காத குப்பைகளையும் இலத்திரனியல் கழிவுகளையும் நீர் நிலைகளுக்குள்ளும் பள்ளங்களுக்குள்ளும் நகரசபை கொட்டி நிரப்பி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் சாந்திபுரம் பகுதியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளமையினால் உடனடியாக நகரசபை குப்பை கொட்டும் செயற்பாட்டை நிறுத்துமாறும் கொட்டிய குப்பைகளை உரிய விதமாக அகற்றுமாறும் இல்லாவிட்டால் மக்களை திரட்டி நகர சபைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் சாந்திபுரம் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: