உயர்தரப் பரீட்சைத் தகைமையுடன் பரீட்சைக்குத் தோற்றுவோரின் சந்தர்ப்பங்கள் பட்டதாரிகளால் இல்லாமற் செய்யப்படுகின்றன.!

Sunday, November 19th, 2017

ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சைத் தகைமையுடன் உள்வாங்கப்படும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சந்தர்ப்பங்களை பல்கலைக்கழகப் பட்டதாரிகள் இல்லாமல் செய்கின்றனர் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரிவித்ததாவது;

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தகைமை ஜீ.சி.ஈ உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலை இல்லாத பிரச்சினை காரணமாக தற்போது பல்கலைக்கழகப் பட்டதாரிகளும் இதற்கு தோற்றுகின்றனர்.

பட்டதாரிகள் துறை சார்ந்த வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு இவ்வாறான சில வேலைக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் இப்போது பட்டதாரிகள் குறித்த பதவிக்கு விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்டு நியமனம் கிடைத்த சில காலத்தில் வேறு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள் இன்னமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிரப்பப்படாமல் உள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 102 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. ஆனால் கடந்த தினங்களில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 45 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 20 பேர் பல்கலைக்கழக பட்டதாரிகள் ஆவர். ஆகவே இவர்கள் வேறு வேலை கிடைத்தால் வெளியேறும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

ஆகவே இந்த வெற்றிடங்கள் தொடர்ச்சியாக நிரப்பப்படாமல் சேவைகள் வழங்குவதில் இடர்கள் ஏற்படும். ஜீ.சி.ஈ உயர்தரத்துடன் இருப்பவர்களை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உள்வாங்குவது சிறப்பாக அமையும் என்று மேலும் தெரிவித்தனர்.

Related posts: