களஞ்சியங்களில் காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்கு – இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை!

Tuesday, October 3rd, 2023

இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா, கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

கோதுமை மாவுக்கு விலைச்சூத்திரமொன்றைப் பேணிவந்தால் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பியவாறு விலைகளைத் தீர்மானிப்பதற்கு இடமளிக்காமல் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை முழுவதிலும் உள்ள வணிக நிலையங்களில் வெவ்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இருந்தபோதும் நிதி அமைச்சு வழங்கிய விலைக்கு அமைய  ஒரு கிலோ கோதுமை மாவை 198 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோதுமை மாவின் விலையை நிர்ணயிப்பதில் இரண்டு விலைக் கணக்கீடுகள் பயன்படுத்தப்படுவதாகவும், இந்நிலை மாற்றப்பட வேண்டுமெனவும் தலைவர் வலியுறுத்தினார்.

கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் விலை அதிகரித்துள்ள போதிலும் ஏற்கனவே இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் காணப்பட்ட கோதுமை மாவுக்கும் புதிய வரியையும் உள்ளடக்கியதாக விலை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் சமையல் எரிவாயு மற்றும் பால் மாவுக்கான விலை சூத்திரத்தை தயாரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நினைவுபடுத்திய குழுவின் தலைவர், கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைச்சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் பன்முகத்தன்மையை சமாளிக்கும் வகையில் விலை சூத்திரம் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: