கடும் அரசியல் தலையீடு : தகுதி அல்லாதோரின் உள்ளீர்ப்பே வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் ?

Thursday, August 20th, 2020

நாடு முழுவதிலும் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்போதைக்குக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற அரசின் தீர்மானத்தை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அவசர உத்தரவாகத் வெளியிட்டுள்ளது.

க.பொ.த. சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு, கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம், ஏனைய ஏழு மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நிகழ்ச்சி திட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிறுத்தப்பட்டமைக்கு , பயனாளிகள் தெரிவில் உள்ள அதீதமான அரசியல் தலையீடே காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஆக குறைந்த கல்வி தகமையுடையவர்களுக்கு அரசவேலை வாய்ப்பினை வழங்குவதன் ஊடாக அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே ஜனாதிபதியின் குறித்த  திட்டத்தின பிரதானமான காரணமாக இருந்தது.

இந்த நோக்கத்திற்கு ஏற்ப பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு இராணுவம் மூலம் மீளாய்வு செய்யப்பட்டு இராணுவம் தமது பக்க அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கின்றது.

அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் பலர் ஜனாதிபதி எதிர்பார்த்த தகமைகளை கொண்டிருக்கவில்லை என கண்டறியப்பட்டள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் அவர்களில் பலர் அதீத அரசியல் செல்வாக்கினால் உட்செருகப்பட்டவர்களாகவும், சமுர்த்தி பயனாளிகள் அல்லாத, சொந்த வீடு வைத்திருப்பவர்களாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே இந்த நியமனம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: