கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, June 8th, 2021

கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணி வருவாயை இலக்காகக் கொண்டு நாம் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதற்காக, புதிய வணிக நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டிலிருந்து பெறும் முதலீடுகளுக்கான பின்னணியை தயார்ப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலீட்டு சபை, கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள, இணையத்தினூடாக நடைபெறும் மாநாட்டில் இரண்டாவது நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தனியார் பங்கு விற்பனை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பத்திரங்களின் வளர்ச்சி, கடன் கருவிகளின் செயல்திறன், புதிய துணிகர மூலதனத்தின் ஊக்குவிப்பு இதுபோன்ற திட்டங்களுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் தொற்றுநோய்க்கு மத்தியிலும் கொழும்பு பங்குச் சந்தையின் சமீபத்திய செயற்பாடு குறித்து மகிழ்ச்சியடையலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 2006 முதல் 2014 வரையான 9 ஆண்டு காலத்தில் நமது நாடு அபிவிருத்தியடைந்த வேகத்தை அனைவரும் அறிவீர்கள். ஆனால் பின்னர் 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில், எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மாத்திரமே அதிகரித்தது. எனவே, நம் நாட்டில் பொருளாதார நன்மைகளின் வளர்ச்சி தடைபட்டது. புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டது.

2020 ஆம் ஆண்டில், நாங்கள் மீண்டும் அரசாங்கத்தை கையகப்படுத்திய பின்னர், உலகம் முழுவதையும் சூழ்ந்த கொவிட் தொற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கொவிட் அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க நாங்கள் 66 நாட்களுக்கு முழு நாட்டையும் மூட வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த வணிகத் துறையும் கடுமையான சவால்களை எதிர்கொண்டது.

இதன் விளைவாக, உலகின் பிற பகுதிகளிலும் நிகழ்ந்ததைப் போல நம் நாடும் பின்னோக்கி சென்றதுடன், 2020 ஆம் ஆண்டில், பொருளாதாரம் 3.6 சதவிகிதம் சுருங்கியது. இதன் விளைவாக, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 80 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சரிந்தது.

எனினும், எமது மக்களின் வாழ்க்கை நிலையை திருப்திகரமான மட்டத்தில் பேண எமது அரசாங்கத்திற்கு முடிந்தது. ஒரு நாடு என்ற வகையில், இந்த தீவிரமான சூழ்நிலையை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு, நம் நாட்டை மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்ற வேண்டும். நாம் இதுவரை ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி, ‘அனைவருக்கும் நீர்’ மற்றும் புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் போன்ற நாடு தழுவிய திட்டங்கள் மூலம் பொருளாதார ரீதியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றோம்.

வணிக நடவடிக்கைகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். மருந்து பொருட்கள் உள்ளிட்ட புதிய தொழில்துறை வலயங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக நகர திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான சட்ட கட்டமைப்பை வகுத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்போது நம் நாடு மீண்டும் 6 சதவீத வளர்ச்சி விகிதத்தை தாண்டிய பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.இலங்கையின் வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்..

மேலும் புதிய துறைமுக நகரை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை நாட்டிற்குள் ஈர்க்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதற்கு தேவையான சட்ட மற்றும் வணிக வசதி கட்டமைப்பை ஒரு புதிய சட்டத்தில் நிறுவியுள்ளோம்.

இதன்மூலம், கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, நம் நாட்டில் ஒரு திருப்புமுனையை நாம் ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். புதிய சட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே சாளரத்தில் இருந்து அணுக முடியும், மேலும் உலகெங்கிலும் உள்ள சிறந்த முதலீட்டாளர்களை நம் நாட்டிற்குள் நுழைய ஊக்குவிப்பதே எமது எதிர்பார்;ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: