ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வு – நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, August 4th, 2023

ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு உடன்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேற்று திறந்து வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 205 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்று அதிகாரப் பகிர்வு தொடர்பில் மீண்டும் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஒற்றையாட்சி நாட்டின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்பது நம் அனைவரின் நம்பிக்கையாகும்.

நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அனைவரும் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: