ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  சுமந்திரன் MP அடாவடி: வெளிநடப்புச் செய்தார் மாகாணசபை உறுப்பினர்!

Sunday, June 5th, 2016
கூட்டம் முடியும் வரை நீர் பேசக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவருமான ஆபிரகாம் சுமந்திரன் வடக்கு மாகாண  சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு தடைவித்ததையடுத்து அவர் வெளிநடப்புச் செய்தார்.
வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (2016.06.04) சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட சம்பவம் இடம்பெற்றது.
முன்பள்ளிகளது செயற்பாடும் அதன் தேவைகள் தொடர்பாக 81 முன்பள்ளிகளில் தமது வைத்தியர்குழு ஆய்வுகள் மேற்கொண்டமை தொடர்பாக வைத்தியகலாநிதி செந்தூரன் அவர்கள் கூட்டத்தில் விபரித்தார். அதில் மழலைகளுக்கான அடிப்படைத் தேவைகள் செய்யப்படாமை மற்றும் கற்பிக்கும் ஆசிரியைகளது கல்வித்தரம் போன்ற பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதுடன் முன்பள்ளிகள் யாருடைய அதிகாரத்தின் கீழ் உள்ளது எனத் தெரியவில்லை என்றும் இதற்குத் தீர்வு வருமா? இல்லையா எனக் கேள்வி எழுப்பியதுடன், இவ்வாறான கூட்டங்களுக்கு மாகாண அமைச்சர்கள் அல்லது அமைச்சின் செயலாளர்கள் வருவதில்லை. இதனால் மத்தியிலிருந்து வரும் அதிகாரிகள் தாங்கள் ஆய்வுகளை நடத்திவிட்டு நிதி ஒதுக்கீடுகளை செய்கிறார்கள் எனக்குறிப்பிட்டார்.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய அதிகாரிகள் செயற்படவேண்டும் என்பதை அங்கே சொல்லுங்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் கூறிய போது, ஆபிரகாம் சுமந்திரன் குறுக்கிட்டு, நாங்கள் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் நீர் என்ன பேசிக்கொணடிருக்கிறீர் எனக் கடுந்தொனியில் சத்தமிட்ட, சில நிமிடங்களில் கூட்டம் முடியும் வரை நீர் பேசக்கூடாது என மறுபடி தடைபோட்டார். பின்னர் மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இரண்டு குழுவாக இயங்குவதாக கால்நடை அபிவிருத்தி உதவிப்பணிப்பாளர் வக்சலா அமிர்தலிங்கம் அத்திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு தொலைபேசியில் கூறியதாகவும் அதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படவேண்டும் எனவே அவருக்கு கடிதம் எழுதுமாறு சுமந்திரனே தீர்மானித்து பிரதேச செயலருக்கு உத்தரவிட்டார்.
இதேவேனை கடந்த 02.06.2016 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வசந்தம் தையல் நிலையத் திறப்பு விழாவில் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கை இல்லத்தீர்மானம் கொண்டுவர ஒரு குழுவால் சதி நடப்பதாகவும் குறிப்பிட்டு, மக்களது மனம் அறியாது மாகாணசபை உறுப்பினர்கள் செயற்பட்டுவருவதாகவும் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத் தனமாக வேலைகளில் ஈடுபட்டு வருவதாவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: