ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022

எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் தேயிலை கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் இரசாயன உரத் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டளவில் மொத்த தேயிலை உற்பத்தி 21 மில்லியனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது இரசாயன உரத் தட்டுப்பாட்டினால் மாத்தறை மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்ஹ குறிப்பிட்டிருந்தார்.

இரசாயன உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறையை அரசு ஒழுங்கு முறைப்படுத்துவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய வீரசுமண வீரசிங்க, தேயிலை பயிர்ச்செய்கைக்காக அரசால் ஒதுக்கப்பட்ட இரசாயன உரங்களில் சில ஏனைய பிரதேசங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாவும் கூட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கூட்டுறவு முகாமைத்துவ திட்டத்தின் ஊடாக தேயிலைத் தோட்டங்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கான செலவில் 50 வீதத்தை அரசு வழங்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கேட்டறிந்தார்.

இது தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ள பிரச்சினை என்பதால் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்துள்ள போதிலும், தம்மைப் பொறுத்தவரை, இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு கூட்டு ஒப்பந்தம் வேண்டும் என்று அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: