உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, June 16th, 2023

வருடாந்தம் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உயர்தரப் பரீட்சையை குறிப்பிட்ட ஒரு மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடு ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மீண்டெழத் தொடங்கியுள்ளது.

ஏற்றுமதி பொருளாதார இலக்கினை கொண்டே எதிர்காலத்தில் நாட்டை முன்கொண்டு செல்ல முடியும்.

ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் புதிய கல்வி திட்டம் தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் எதிர்பார்த்துள்ளோம்.

13 வருடங்கள் மாணவர்களுக்கு கட்டாய கல்வி அவசியமாகும். எதிர்காலத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து ஆராயப்படும்.

ஏனைய நாடுகளைப் போன்று எமது கல்வித்திட்டத்தையும் மேம்படுத்தும் வகையில் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையை குறிப்பிட்ட ஒரு மாதத்தில் நடத்துவதற்கான சட்டம் கொண்டுவரப்படும் எனவும், உரிய அவசியம் இன்றி அந்த பரீட்சையை மாற்றுவதனால் அதற்கு நாடாளுமன்ற அனுமதி அவசியம் ஏற்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: