ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு சிக்கல்!

Monday, September 11th, 2017

சரத் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதார விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

எனவே நாளை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடரில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் அனைத்துலக குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான குழு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் ஐநா மனித உரிமைப் பேரவையின் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர். இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படவில்லை. ஆனால் ஐநாவின் சிறப்பு அந்தஸ்துடைய சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகள் எழுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Related posts: