ஏப்ரல் 21 தாக்குதல் – சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன!

Wednesday, April 27th, 2022

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீண்டும் தோண்டி எடுக்கும் பணிகள் அம்பாறை – புத்தங்கல பொது மயானத்தில் இடம்பெற்றன.

அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் துஷாரா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் இந்தப் பணிகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சட்ட வைத்திய அதிகாரிகளான N.W.U.தினுகா மதுசானி மற்றும் ருச்சிர நதீர ஆகியோருடன், இரசாயன பகுப்பாய்வாளர் வனிதா பண்டாரநாயக்க, தடயவியல் காவல்துறை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் பிரசன்னத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை 8.30 அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள் மதியம் அளவில் நிறைவடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவரான மொஹமட் ஹஸ்துன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரபணுவை அடையாளம் காண்பதற்காக குறித்த உடற்பாகங்கள் மீள தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிற்கு மத்தியில், 2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் பலியானதாக கூறப்பட்டபோதிலும் 16 பேரின் உடற்பாகங்களே மீட்கப்பட்டன.

சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன், இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், உண்மையிலேயே அவர் குறித்த தாக்குதலில் உயிரிழந்தாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: