ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 33 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

Tuesday, September 13th, 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இலங்கை விவகாரம் இம்முறை விவாதத்துக்கு உட்படுத்தப்படாதபோதும், எதிர்வரும் வியாழக்கிழமை பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா.செயற்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போதல்கள் இலங்கையில் நீண்டகாலமாக இழுபட்டுவரும் விடயமாக காணப்படும் சூழ்நிலையில், 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பான செயற்குழுவினர் தமது விஜயத்தின் அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் சந்தித்திருந்த இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்ததுடன், காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.

குறித்த செயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும் இலங்கை சார்பில் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதும், பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 33ஆவது கூட்டத் தொடர் விவாதங்களில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருந்த 32ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹூசைன் வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார்.

இவர் அடுத்தவருடம் எழுத்துமூல அறிக்கையை முன்வைப்பார். இவ்வாறான நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கான அலுவலகம் அமைத்தல் மற்றும் காணாமல் போனோர் சான்றிதழ் வழங்குதல் ஆகிய சட்டமூலங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு காணப்படும் என கருதப்படுகிறது. எனினும், பலவந்தமான காணாமல் தோல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய நீதி பொறிமுறை தொடர்பில் சிறியதொரு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் குறித்த குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இன்றையதினம் ஆரம்பிக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது எதிர்வரும் 30ஆம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

unhrc_12092016_kaa_cmy

Related posts: