இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்: யாழ். இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் தெரிவிப்பு!

Wednesday, August 3rd, 2016

இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கும் அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என யாழ் இந்திய உதவித் துணைத்தூதுவர் அ.நடராஜன் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின்  1.2 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். மத்திய கலாசார நிலையத்தினை ஒப்பந்தகாரர்

நிபுணர்கள்  குழுவிற்குக்  கையளிப்பதற்கான  உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு  இன்று புதன்கிழமை(03) முற்பகல் யாழ். பொதுநூலகத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகக்  கோணரில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,   இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும்  தற்போது பொருளாதார ரீதியான வளர்ச்சி முன்னேற்றம் கண்டுள்ளது.  இதற்கெனப் பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, இரு நாடுகளுக்கிடையிலும்  சமத்துவம், புரிந்துணர்வு நடவடிக்கைகளைக்  கட்டியெழுப்ப இந்திய அரசாங்கம் என்றும் உறுதுணையாகச் செயற்படும் என்றார்.

குறித்த நிகழ்வில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த கட்டட நிர்மாணத் துறை நிபுணர்கள், கட்டட வடிவமைப்புக்  கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: