எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவது இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, May 19th, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் அவர், மக்களின் விரக்தி மற்றும் கோபத்தை புரிந்துக்கொள்ள முடிகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வெளியாகும் தகவல் பொய்யானது.

தற்போது சந்தையில் ஒரே விலையிலேயே எரிபொருள் வழங்கப்படுவதாகவும், எந்த தரப்பினருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தரிப்பிடங்களில் உள்ள பம்பிகளில் காட்சிப்படுத்தப்படும் கட்டணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எவருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சலுகைகள் காட்டக்கூடாதென்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

நாரஹேன்பிட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவினூடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று காலைமுதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் குறைந்த விலைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என சுமித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் சபாநாயகரினால் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வீடு திரும்புவதற்கு எரிபொருள் இல்லாவிட்டால் தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: