சட்டத்தில் இடமில்லை : ஆகவே ஆதரவளிக்க முடியாதுள்ளது – முதல்வருக்கான இல்லம் தொடர்பில் றெமீடியஸ்!

Friday, September 28th, 2018

யாழ் மாநகர முதல்வரின் செயற்பாடுகளுக்கு வாடகை இல்லம் பெறுவது தொடர்பான பிரேரணைக்கு சட்டத்தில் இடம் இல்லை என்பதால் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

இன்றையதினம் யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாநகரின் முதல்வருக்கு பிரத்தியேக இல்லம் வழங்கப்படுவது தொடர்பான விவாதம் நடைபெற்றபோதே இவ்வாறு  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

குறித்த விடயம் ஆரம்பத்தில் சபையில் முன்வைக்கப்பட்டபோது அதை நாம் வரவேற்றிருந்தோம். ஆனாலும் அது தொடர்பில் இலங்கையின் உள்ளூராட்சி மன்ற சட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பார்த்தபோது மாநகர முதல்வருக்கு வாடகைக்கு பெற்று பிரத்தியேக இல்லம் வழங்குவதற்கு அதிகாரம் காணப்படவில்லை.

ஆனாலும் யாழ் மாநகருக்கு சொந்தமாக நிலையான ஒரு கட்டடம் அமைக்கப்பட்டு அதில் முதல்வருக்கு பிரத்தியேக இல்லம் வழங்க இடமுண்டு. ஆனாலும் வாடகைக்கு ஒரு இடம் எடுத்து முதல்வர் தனது தேவைகளுக்கு பாவிப்பதற்கான அதிகாரம் இதில் காணப்படவில்லை.

அத்துடன் முதல்வருக்காக ஒரு பிரத்தியேக கட்டடம் எடுக்கப்பட்டு வாடகை வழங்கப்பட்டால் அது சில சமயங்களில் உறுப்பினர்களின் பிரத்தியேக நிதியிலிருந்து வாடகை வழங்கப்படும் சந்தர்ப்பம் உருவாக இடமுண்டு.

ஆகவே வாடகைக்கு கட்டடம் எடுக்கும் குறித்த விடயம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு உடன்பாடு கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: