எமது மனிதநேயத் திட்டம் சர்வதேச ஆதரவைப் பெறுகின்றது – அதை சிரழிக்க வேண்டாம் என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Monday, March 15th, 2021

‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ என்ற இலக்கை நனவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன எமது அரசாங்கத்தின் கீழ், அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில் வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு மாகாணப் பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் –

எமது மனிதநேயத் திட்டம் சர்வதேச ஆதரவைப் பெறுகின்றது. அந்த ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவே இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எமக்கு உதவியுள்ளனர்.’

அதேநேரம் சுதந்திரம், இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டின் அபிவிருத்திக்கு முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘வடக்கு மற்றும் கிழக்கு உட்பட, ஒரு ஒற்றையாட்சி நாடாக நாட்டின் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முப்பது ஆண்டுகால பயங்கரவாதப் போர் இந்தப் பகுதிகளில் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது.

அபிவிருத்தி மறுக்கப்பட்டது. இருப்பினும், போரில் வெற்றி பெற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் இந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்;

அத்துடன் திருகோணமலை மாவட்டம் நாட்டின் மிகவும் அதிர்ஷ்டமான பகுதிகளில் ஒன்றாகும். இந்தப் பகுதி நாட்டின் வளங்கள் நிறைந்த பொருளாதார மையமாக அபிவிருத்தியடைந்து வருகின்றது.

கடந்த காலங்களில் கூட, திருகோணமலை கடல் பகுதி சர்வதேச வர்த்தகத்திற்கும், ஏனைய பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலைத் துறைமுகம் என்பது இப்பகுதியின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரு வளமாகும்.  அதன்படி, வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் திருகோணமலையில் நிறுவப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் தற்போது கொன்சியூலர் சேவைகளுக்காக கொழும்புக்கு செல்ல வேண்டியதில்லை. இது மக்களுக்கு அவர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதற்கு வாய்ப்பளித்துள்ளது என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: