எமது மண்ணின் தொன்மைக் குடிகள் தாம் என்பதில் தமிழ் மக்கள் உறுதியுடன் உள்ளார்கள் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, March 5th, 2017

 

எமது மண்ணில் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற தொன்மைக்குடிகள் தாம் என்பதில் தமிழ் பேசும் மக்கள் என்றும் உறுதியுடன் இருந்துவருகின்றார்கள் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

நாம் ஒரு தேசிய இனம்.  வடக்கு கிழக்கு எமது பூர்வீக நிலம். இந்த மண்ணில் தொன்றுதொட்டு வாழ்ந்துவருகின்ற தொன்மைக் குடிகள் நாம். எமது அரசியல் அபிலாஷைகள் அனைத்தும் பூரணமாக வழங்கப்படவேண்டும்.

இவ்விடயத்தில் தமிழ் பேசும் மக்கள் என்றும் உறுதியாகவே இருந்து வருகின்றார்கள். ஆனாலும் சில தமிழ் தலைமைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலேயே தொடர்ந்தும் அரைத்த மாவை அரைப்பது போல இதே கருத்துக்களை உரத்துப்பேசி வருகின்றார்கள்.

தெளிவோடு இருக்கும் தமிழ் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தும் ஏன் அவர்கள் திரும்பத் திரும்ப தமிழ் மக்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க பேசி வருகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வாக்குகளை அபகரிப்பதற்காகவே இவ்வாறு அவர்கள் பேசி வருகின்றார்கள் என்பதே உண்மை. மாறாக எமது மக்களின் உரிமைக்காக அவர்கள் பேசுவதாக இருந்தால் உறுதியுடன் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உசுப்பேற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை.

உரிமை மீது அக்கறை உண்டென்றால் அரசுடன் பேச வேண்டும். தென்னிலங்கை மக்களுடன் பேசவேண்டும். தென்னிலங்கை அரசியல் தலைமைகளோடு பேசவேண்டும். யார் எமது உரிமைக்கு தடையாக இருக்கின்றார்களோ யாரிடம் இருந்து நாம் உரிமைகளை பெறவேண்டுமோ அவர்களுடன் பேசவேண்டும்.

அதனூடாக ஒரு தேசிய நல்லிணக்கத்தை எமது மக்களின் நலன் சார்ந்து உருவாக்கவேண்டும். ஒருபுறம் அரசியல் பலத்தை பயன்படுத்திக்கொண்டு மறுபுறத்தில் தேசிய நல்லிணக்கத்தையும் உருவாக்கவேண்டும். அதன்மூலமே எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கமுடியும்.

ஆகவே உறுதியுடன் இருக்கம் தமிழ் மக்களுக்கு உரிமை குறித்து உபதேசம் செய்வதை விடுத்து தென்னிலங்கையை உரியமுறையில் கையாள்வதற்கு சக தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

 17155637_626853100846887_7577864623508536484_n

 

Related posts: