அஸ்ட்ராசெனெகாவை பெற்றவர்களுக்கு இரண்டாவது செலுத்துகையாக பைஸர் தடுப்பூசியை செலுத்த முடியும் – உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலோபாய முகாமைத்துவ பிரதானி தெரிவிப்பு!

Monday, June 14th, 2021

அஸ்ட்ராசெனெகா கொவிட் தடுப்பூசியின் முதல் செலுத்துகையை பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது செலுத்துகைக்காக அமெரிக்காவின் பைஸர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலோபாய முகாமைத்துவம் தொடர்பான பிரதானி அலெஜன்ட்ரோ க்ராவியோடோ தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசிகளுக்கு உலகநாடுகள் பலவற்றில் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், அதற்கான உடனடி தீர்வாக வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்துவதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

இந்தநிலையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

மெய்நிகர் கேள்வி பதில் அமர்வொன்றின்போது, கேட்கப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய ஆய்வுகளில், இந்த கலவை மற்றும் பொருத்தப்பாடு என்பன நன்மை பயக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அஸ்ட்ராசெனெகாவின் முதல் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை இரண்டாவது செலுத்துகையாக இணைத்து செலுத்துவது கொவிட் வைரஸுக்கு எதிரான பாதுகாப்பின் அளவை இரட்டிப்பாக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது செலுத்துகையாக பைஸர் தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் செயல்திறன் அளவு 97 சதவீதமாக காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பைஸர் தடுப்பூசியுடன் கலப்பது பாதுகாப்பானது மற்றும் செயற்திறன் மிக்கது என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இருந்தாலும், தற்போது உலகம் நாடுகளில் கிடைக்கக்கூடிய ஏனைய தடுப்பூசிகளை வேறு தடுப்பூசிகளுடன் இணைப்பது தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: