எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீப்பரவல் – கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி!

Thursday, May 27th, 2021

கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் சமுத்திர பாதுகாப்பு கப்பலும், விமானமும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தீப்பற்றியுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் வத்தளை – ப்ரீதிபுர முதல் நீர்கொழும்பு வரையான கடற்கரையில் கரையொதுங்கின. அதனை சிலர் சேகரித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அவ்வாறான பொருட்களை தொட வேண்டாம் என கடல்சார் சமுத்திர பாதுகாப்பு அதிகாரபை, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

எனினும், அந்த அறிவுறுத்தலையும் மீறி கரையொதுங்கிய பொருட்களைக் கொண்டு சென்றவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தினால் நாட்டில் வளிமாசடைவு ஏற்படாது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது. இந்த வருடம் தயாரிக்கப்பட்ட குறித்த கப்பலின் மூன்றாவது கடற்பயணத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த கப்பலிலிருந்து வெளியேறிய எரிப்பொருள் கடலில் கலந்தமையினால் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வது தொடர்பில் நாரா நிறுவனம் கூறுகையில் – தற்போதைய நிலையில், கடந்த 5, 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என்பதால், எவ்வித பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், மீன்களின் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் நாரா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: