பொலிஸ் சேவை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும் – உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020

முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் சேவையை மருசீரமைப்பதற்கு குறித்த பரிந்துரைகளை அமைச்சு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமது சொந்த கருத்துக்களை வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன்,    பொலிஸ் சேவையை மேலும் வினைத்திறன்கொண்டதாக மாற்றி அமைக்க அவர்களது கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பொலிஸ் அதிகாரிகள் சிறந்த முறையில் சேவையாற்றும் சூழலை உருவாக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையாக கட்டிடத்தின் தற்போதைய வெளித்தோற்றத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்  சேவையின் மதிப்பை உயர்த்துவதற்காக நாட்டின் பொலிஸ் நிலையங்களின் வெளிப்புற தோற்றங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதகவும் அவர் இதன்போது  தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் நிலையங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களின் நிலை உள்ளிட்ட உள்ளக  பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளினால் வலுவான கண்காணிப்பு முறைமையை மேற்கொள்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: