இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்து!

Sunday, April 14th, 2024

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கப்படுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எந்தவொரு அவசரநிலையையும் எதிர்நோக்கி எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதுவர் தமது பேஸ்புக் பதிவில், தேவையற்ற ஈடுபாடுகளுக்காக இலங்கையர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

அத்துடன் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளும் இலங்கையர்கள் ஏதேனும் அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், நீண்ட காலத்திற்கு போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதாக இரண்டு நாடுகளுக்கு இடையில் முறுகல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனையடுத்து இஸ்ரேலில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 200 ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது.

இதில் நூறுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை தமது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எனினும் சில ஆளில்லா விமானங்களும் ஏவுகணைகளும் இஸ்ரேலில் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் காரணமாக சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

முன்னதாக டமாஸ்கஸில் உள்ள தனது தூதரக வளாகத்தில் மூத்த ஈரானிய இராணுவ அதிகாரிகளைக் கொன்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் சபதம் செய்ததால், காசாவில் பல மாதங்களாக நீடித்த பதற்றம் தற்போது ஈரான்- இஸ்ரேல் போராக மாற்றமடைந்துள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலை அடுத்து அந்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் இஸ்ரேலை குறிவைத்து ஆளில்லா விமானங்களை இடைமறிக்க உதவியுள்ளன. இதெவேளை மேற்கத்திய தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தாக்குதல் பற்றி விவாதிப்பதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டம் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: