இலங்கை – ரஷ்யாவுக்கு இடையில் கூட்டு சுற்றுலாத் திட்டம் ஆரம்பம் !

Thursday, August 5th, 2021

இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான கூட்டு சுற்றுலாத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ரஷ்ய சுற்றுலாப் பயணிகளிடையே இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதை முழுமையாக ஆதரிப்பதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

தற்போது ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ரஷ்ய கூட்டமைப்பின் சுற்றுலா அமைப்பின் துணைத் தலைவர் எலெனா வி லைசென்கோவா தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்டு இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து அமைச்சர் ரஷ்ய சுற்றுலா அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில், ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏரோஃப்ளாட், மொஸ்கோ – கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவைகளுக்கான பயணச்சீட்டுகளின் விற்பனையை ஆரம்பித்துள்ளது. இது செப்டம்பர் 2 ஆம் திகதிமுதல் வாரத்திற்கு இரண்டு முறை செயல்படத் தொடங்கும்.

மறுபுறம் 2015 ஆம் ஆண்டுமுதல் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானம நிலையம் மற்றும் மொஸ்கோவின் டொமோடெடோவோ விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையேயான சேவையை கடந்த வாரம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: