இலங்கை மருத்துவ சபைக்கு சட்ட ஆலோசனை!  

Thursday, October 19th, 2017

 

மாலபே சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரி தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் வகுக்கப்பட்ட குறைந்தபட்ச தரத்திற்கான பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை சம்பந்தமாக இலங்கை மருத்துவ சபையின் சட்டத்தரணிகளுடைய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள குறித்த சபை தீர்மானித்துள்ளது.

நேற்று(18) மாலை கூடிய இலங்கை மருத்துவ சபையின் மருத்துவக் கல்லூரிக்கான குறைந்தபட்ச தரம் தொடர்பான குழு இந்த தீர்மானத்திற்கு வந்ததாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா தெரிவித்திருந்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதாரச் செயலாளர் ஆகியோருடன் இலங்கை மருத்துவ சபை அண்மையில் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தது.

குறித்த இந்தக் கலந்துரையாடலின் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வகுக்கப்பட்ட மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி தொடர்பான பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை இலங்கை மருத்துவ சபைக்கு வழங்கப்பட்டது.

அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பல பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை மருத்துவ சபையின் மருத்துவக் கல்லூரிக்கான குறைந்தபட்ச தரம் தொடர்பான குழு உறுப்பினர்கள் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடன்பட முடியாத சில பரிந்துரைகள் தொடர்பில் சட்டத்தரணிகளுடைய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக மருத்துவ சபையின் பதிவாளர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா கூறினார்.

Related posts: