இலங்கை போன்ற வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்று தன்னைத்தானே கேட்க வேண்டும் – சீனா குற்றச்சாட்டு!
 Friday, July 29th, 2022
        
                    Friday, July 29th, 2022
            
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்பொழுதும் இலங்கையை வழிநடத்தும் கோட்பாட்டை பின்பற்றுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் விஞ்ஞான திட்டமிடல் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவை எந்த அரசியல் விடயத்திலும் இணைக்கப்படவில்லை. இலங்கையின் பொருளாதாரத்திற்கு அந்த கடன்கள் பங்களித்துள்ளதுடன் இலங்கை மக்களுக்கு உறுதியான நன்மைகளையும் கொண்டு வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் கூறியுள்ளார்.
யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் நிர்வாகியான சமந்தா பவர், நேற்று புதுடில்லியில் சுமத்திய குற்றச்சாட்டில், சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்கள், திட்டமிடப்படாத ஒளிபுகாத கடன்கள் என்று குறிப்பிட்டமைக்கு பதில் வழங்கும் வகையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரின் கூற்று அமைந்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பல கூறுகளைக் கொண்டது. சர்வதேச மூலதனச் சந்தை மற்றும் பலதரப்பு அபிவிருத்தி வங்கிகளைக் காட்டிலும் சீனா தொடர்பான கடன்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது என்று சாவோ லிஜியன் குறிப்பிட்டுள்ளார்.
சீனா பெரும்பாலும் இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால முதிர்ச்சியுடன் கூடிய முன்னுரிமைக் கடன்களை வழங்குகிறது இது இலங்கையின் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியது.
சர்வதேச கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதாக இலங்கை அறிவித்த சிறிது நேரத்திலேயே சீன நிதி நிறுவனங்கள் இலங்கை தரப்பை அணுகியதுடன் சீனா தொடர்பான முதிர்ச்சியடைந்த கடன்களை கையாள்வதற்கும் சரியான வழியை கண்டறியவும் தயார் நிலையை காட்டியதாக சாவோ லிஜியன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சமீபத்திய திடீர் வட்டி விகித உயர்வு மற்றும் இருப்புநிலைக் குறைப்பு ஆகியவற்றின் விளைவாக உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சீனப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வழிதவறிய ஒருதலைப்பட்ச தடைகளே தொழில்துறைகளின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.
அத்துடன் இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து நாடுகளின் பொருளாதார மற்றும் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை போன்ற வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்று தன்னைத்தானே கேட்க வேண்டும் என்றும் சீன பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும் கடன் சுமையை குறைக்கவும் நிலையான வளர்ச்சியை அடையவும் அமெரிக்கா உண்மையாக உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        