இலங்கை ஜனாதிபதியின் பரந்துபட்ட செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் – ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகுமென்றும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் அவர் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்தமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்பதுடன் இலங்கை ஜனாதிபதி பொது மக்களுக்கு உரித்தான அவகாசங்ளை விரிவாக்குவதற்கு பரந்தப்பட்ட கலந்துரையாடல்களை ஏற்படுத்தியமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பொறுப்புடனும் ஒத்துழைப்புடனும் கடமையாற்றுவதையும் தான் வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய விசாரணை குழுவொன்றை அமைத்துள்ளமைக்கும் அந்த அறிக்கையை தமக்கு சமர்ப்பித்தமைக்கும் வரவேற்பை தெரிவிப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் தேசிய கொள்கையை நிறைவேற்றியுள்ளமை மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டு செல்கின்றமையும் வரவேற்கத்தக்கதென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பெச்லட் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: