பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!

Friday, September 28th, 2018

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக வரையப்பட்டுள்ள பயங்கரவாத எதிரப்புச் சட்டமூலம் கடந்தவாரம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன 88 பக்கங்களைக் கொண்ட இந்த சட்ட மூலத்தை வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக இந்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. தீவிரவாதம் மற்றும் ஏனைய அதற்குத் துணையான நடவடிக்கைகளில் இருந்து இலங்கையையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகளினால் எவருக்கேனும் மரணத்தை ஏற்படுத்தியிருந்தால் குற்றவாளிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனையை வழங்குவதற்கு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகளினால் ஈடுபட்டிருந்தால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தால் உதவி அளித்திருந்தால் 15 ஆண்டுகளுக்கு மிகையாகாத சிறைத்தண்டனையையும் 1 மில்லியன் ரூபாவுக்கு மிகையாகாத அபராதத்தையும் செலுத்துமாறு உத்தரவிடவும் இந்தச் சட்டமூலம் வழி செய்கிறது.

குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஒரு சந்தேக நபரை 6 மாதங்களுக்கு மேல் தடுத்து வைத்திருக்க முடியாது என்றும் இந்தப் புதிய சட்டமூலம் கூறுகிறது.

அதற்கு மேல் ஆறு மாதங்கள் தடுத்து வைத்திருக்க வேண்டுமானால் சட்டமா அதிபரின் விண்ணப்பத்தின் பேரில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஆணையை பெற வேண்டும்.

புதிய சட்டமூலத்தின்படி ஜனாதிபதி நாடு முழுவதற்கும் அல்லது ஒரு பகுதியில் இலங்கை கடல் மற்றும் வான் பரப்புகளில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்க முடியும்.

எந்தவொரு ஊரடங்கு உத்தரவும் அதிகபட்சமாக 24 மணி நேரத்தை தாண்டக் கூடாது. ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 3 இலட்சம் ரூபாவுக்கு மிகையாகாத அபராதம் விதிக்க முடியும் என்றும் இந்தச் சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

Related posts: