இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது அவசரகால நிலை – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறையாகும் வகையில் அதி விசேட வர்த்தமானியும் வெளியானது!

Saturday, May 7th, 2022

இலங்கையில் நேற்று (மே 06) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதியின்மையை அடுத்து, கடந்த ஏப்ரல் 01 முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததோடு, அதனுடன் இணைந்தவாறு ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக வலைத்தள முடக்கம் ஆகியன பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை அடுத்து, ஏப்ரல் 06ஆம் திகதி அவசரகால நிலை நீக்கப்பட்டிருந்தது.

நேற்றையதினம் (06) நாடு தழுவிய ஹர்த்தால் மற்றும் பாராளுமன்றத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மை உள்ளிட்ட விடயங்களை காரணம் காட்டி, மீண்டும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்திற்கு அமைய, பிடியாணையின்றி கைது செய்தல், 48 மணி நேரத்திற்கு நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைத்தல், எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்தல், சட்டங்களை இடைநிறுத்துவதற்கும், நீதிமன்றத்தினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.

அத்துடன் அவ்வாறான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்குகளையும் தொடர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: