இலங்கையில் பதற்றம் அதிகரிப்பு : ஐ.நா மனித உரிமை ஆணையாளர் !

Tuesday, June 25th, 2019

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளதானது, கவலையை தோற்றுவித்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 41 ஆவது கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு கூறினார்.

”மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அதிபருக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில், ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாதமை, அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாதுகாப்புப் படைகளின் செயல்திறனில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்னை கலங்கச் செய்கிறது. வன்முறையைத் தூண்டும் வகையிலான, சில மதத் தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகள் கவலைக்குரியவை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்கான ஆரம்ப எச்சரிக்கையாக இது கருதப்பட வேண்டும்.

சில தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் தேவை என்றாலும், அவசரகால நிலை குறைந்தபட்ச காலமாக இருக்க வேண்டும்.

அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாடுகளின் மூல காரணிகளைக் கண்டறிந்து, நிவர்த்தி செய்வதற்கு, அரசியல், மத மற்றும் பிற சமூகத் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த சூழலில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பாராட்டத்தக்க மற்றும் தைரியமான பங்களிப்புக்கு எனது ஆதரவை வெளிப்படுத்துகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: