இலங்கையில் கொரோனா தொற்றின் 17 ஆவது மரணமும் பதிவானது!

Tuesday, October 27th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றினால் 17ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முல்லேரியாவாவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த மரணத்துடன் சேர்த்து கடந்த வாரத்தில் கொரோனா தொற்றினால் இலங்கையில் 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதனடிப்படையில் 16 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் ஒக்டோபர் 25 ஆம் திகதி பதிவானது. கொழும்பு -02 ஐச் சேர்ந்த 70 வயதுடையவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அத்தோடு 15 வது மரணம் குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 56 வயதான இருதய நோயாளி அதற்கு முந்தைய நாள் அதாவது 24 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதற்கிடையில், 14 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் ஒரு வாரத்திற்கு முன்னர் பதிவானது. இவ்வாறு உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டார்.

இலங்கையில் இன்று காலை வரையான காலப்பகுதியில் மொத்தம் 8,413 கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். சுகாதார அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 4,464 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 3,933 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: