இலங்கையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – அமெரிக்கா!

Friday, December 16th, 2016

இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு சபையின் தீர்மானம் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

புதிய மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் பணிப்பாளர் சபை, பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை குறைப்பை ஊக்குவிப்பதற்கான நாடாக இலங்கையை தேர்வுசெய்துள்ளது.

மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் உதவித் திட்டத்திற்குள் இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் பணிப்பாளர் சபையின் சந்திப்பில் இலங்கை, புர்கினோ ஃபசோ மற்றும் ரியூனியா ஆகிய நாடுகள், இந்த ஊக்குவிப்பு திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்டிருந்தன.

இலங்கை மக்களுடனான ஆறு தசாப்த அபிவிருத்தி பங்களிப்புக்கு பாரிய உந்துசக்தியாக, மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் தெரிவித்துள்ளார்.

மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் உதவியை பெறுகின்ற நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டதன் அடிப்படையில், ஜனநாயக ஆட்சி, மக்களுக்கான முதலீடு மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சி, ஊழலுக்கு எதிராக போராடுதல், பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல், வறுமைக்கு எதிராக போராடும் திறனை அதிகப்படுத்தல், மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில் சிறந்த தரங்களை அடைவதே அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடான ஒத்துழைப்பின் நோக்கம் என மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி டனா ஜே ஹைடி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளமை உள்ளிட்ட தொடர்ச்சியான மேம்பாடுகளை காண்பித்தன் அடிப்படையில் மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் உதவித் திட்டத்திற்கென இலங்கை தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

 download

Related posts: