கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பு – மாவட்ட அரச அதிபர் ரூபவதி தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டு நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் உணவு உற்பத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் – மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் இவ்வாண்டு காலப்போகத்தின் போது 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 370 ஏக்கர் நிலப்பரப்பில் சோளச் செய்கையும் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம், 330 ஏக்கர் நிலப்பரப்பில் சிறிய வெங்காயம், 52 ஏக்கர் நிலப்பரப்பில் குரக்கன் செய்கையும் 1190 ஏக்கர் நிலப்பரப்பில் மிளகாய் செய்கையும் 690 ஏக்கர் நிலப்பரப்பில் கௌபியும் 620 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலையும் 890 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்துச் செய்கையும் 680 ஏக்கர் நிலப்பரப்பில் பயறுச்செய்கையும் 180 ஏக்கர் நிலப்பரப்பில் எள்ளுச் செய்கையும் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் அதே நேரம் நெற்செய்கைக்கு தேவையான உரம் விநியோகிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: