இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி!

Thursday, October 29th, 2020

யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைக் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

இந்தவகையில் யாழ்ப்பாணத்தில் மருதங்கேணியில் ஒரு வைத்தியசாலை அமைக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு வைத்தியசாலையாக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியும் மாற்றப்படவுள்ளது.

இதற்காகத் தற்போது கல்வியற் கல்லூரியில் இயங்கும் கொரோனாத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 217 பேரும் நாளை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு கட்டடம் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

அவ்வாறு கையளிக்கப்படும் கட்டடத்தின் மாணவர்கள் விடுதி வைத்தியர்கள் விடுதியாகவும், கல்விக் கூடம் வைத்தியசாலையாகவும் மாற்றப்படவுள்ளதை வைத்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 50 நோயாளர்களை சிகிச்சையளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த மட்டத்தை எட்டியுள்ளதால் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியை கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 300 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் அங்கு சிகிச்சையளிக்கும் நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர்களே கோப்பாயிலும் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்கள் ஒரு சுற்றில் 10 நாள் அங்கு பணியாற்றிய பின்னர் 14 நாள்தனிமைப்படுத்தலின் பின்னர் மீண்டும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 பேருக்கு சிகிச்சையளிக்கும் வசதியுடன் தற்போது இலங்கையில் மிகச்சில கொரோனா வைத்தியசாலைகளே உள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைதீவில் மாங்குளம் வைத்தியசாலை இந்த வாரமும், கிளிநொச்சியில் கிருஷ்ணபுரம் பகுதியில் அடுத்த வாரமும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: