2017 க. பொ. த உயர் தரப் பரீட்சை: வடக்கு கூடிய சதவீத சித்தி!

Sunday, January 14th, 2018

2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பாடசாலைகளுக்கிடையிலான பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் மன்னார் மாவட்டம் 72.57 சதவீதத்தையும் முல்லைத்தீவு மாவட்டம் 69.80 சதவீதத்தையும் பெற்று அகில இலங்கையில் முதலிரு இடங்களையும் பெற்றுள்ளது.

இத்தரவுகளின் படி யாழ்.மாவட்டம் 64.88 சதவீதத்தைப் பெற்று 6 ஆவது இடத்தையும் வவுனியா 67 சதவீதத்தைப் பெற்று 10 ஆவது இடத்திலும் கிளிநொச்சி 64.42 சதவீதத்தைப் பெற்று 20 மாவட்டமாகவும் காணப்படுகின்றது.

மேலும் மூன்றாம் இடத்தில் இரத்தினபுரி மாவட்டமும் நான்காம் இடத்தில் நுவரெலியா மாவட்டமும் 5 ஆம் இடத்தில் புத்தளம் மாவட்டமும் 7 ஆவது இடத்தில் மொனராகலை மாவட்டமும் 8 ஆவது இடத்தில் கொழும்பு மாவட்டமும் 9 ஆவது இடத்தில் மாத்தறை மாவட்டமும் காணப்படுகின்றன.

இறுதிநிலையில் 25 ஆவது மாவட்டமாக 60.28 சதவீதத்துடன் அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றிய 1203 பேரில் 873 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளைப் பெற்றிருக்கின்றனர்.

இது 72.57 சதவீதமாகும். எந்தவொரு பாடத்திலும் சித்தியடையாதோர் தொகை 62 ஆகும். இது 5.15 சதவீதமாகும். இதேவேளை தனியார் பரீட்சார்த்திகளின் முடிவுகளின் அடிப்படையில் 68.41 சதவீதம் சித்தி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் இம்முறை வடக்கு மாகாணமானது இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அகில இலங்கை ரீதியாக இம்முறை க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 53 ஆயிரத்து 330 பேர் தோற்றி இவர்களில் 3 பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேராகும்.

இது நூற்றுக்கு 64.38 சதவீதமாகும். எந்தவொரு பாடத்திலும் சித்தியடையாதோர் தொகை 22 ஆயிரத்து 21 ஆகும். இது நூற்றுக்கு 8.69 சதவீதமாக உள்ளது.

Related posts: