விமர்சனங்களை கண்டு அஞ்சபோவதில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022

குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு, ஒரு சிலர் விவசாய அமைச்சின் முன்னேற்றத்தை அறியாமல் விவசாய அமைச்சு தோல்வி எனக் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறான விமர்சனங்களை கண்டு ஒருபோதும் அஞ்சபோவதில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  தெரிவித்துள்ளார்.

கொழும்பு – வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்’ –

நாட்டில் எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பலர் குறிப்பிட்டுள்ளார்கள். துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் அந்நாட்டு மக்கள் பட்டினியாக இருப்பதில்லை.

உலக நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் போது உணவு உள்ள நாடுகளில் இருந்து உணவு பொருட்களை பெற்றுக் கொள்வது வழமையான செயற்பாடாகும்.

போஸ் பொஸ்பேட் உர நிறுவனம் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்னர் விவசாயத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. அவ்வேளையில் அந்நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்க்கொண்டிருந்தது. இருப்பினும் அந்நிறுவனம் தற்போது இலாபமடையும் நிலைக்கு முன்னேற்றமடைந்துள்ளது.

பொஸ்பேட் நிறுவனம் 50 கிலோகிராம் உரத்தை 550 ரூபாவிற்கு விநியோகித்தாலும் ஏனைய சந்தைகளில் பொஸ்பேட் உரம் 1,000 ரூபா தொடக்கம் 1,100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறான நிலைமையினை மாற்றியமைக்க உரிய திட்டங்கள் இனிவரும் நாட்களில் செயற்படுத்தப்படும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் உரிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

நாட்டில் எக்காரணிகளுக்காகவும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம். கடந்த காலங்களை காட்டிலும் விவசாயத்துறை அமைச்சு தற்போது முன்னேற்றமடைந்துள்ளது என்றும் அவர் தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: